Monday, 15 July 2019

கர்த்தரின் அழைப்பு !

கர்த்தரின் அழைப்பு !


அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியேனோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்தநாவும் உள்ளவன் என்றான். - (யாத்திராகமம் 4:10).


சகோ. பக்தசிங் என்ற தேவ ஊழியரை பற்றி நம்மில் அநேகர் அறிந்திருக்கலாம். அவர் ஆசியாவிலுள்ள அளவற்ற மக்களுக்கு ஆவிக்குரிய தகப்பனாகவும், உலகின் பல பாகங்களிலுமுள்ள விசுவாசிகளுக்கு ஆவிக்குரிய ஒரு முன்மாதியாகவும், விளங்கினார். வேதத்தை நேசித்து, கர்த்தருக்கு வைராக்கியமாய் ஊழியஞ்செய்யும் ஒரு கூட்ட ஊழியர்களை உருவாக்கிய பரிசுத்தவான் அவர். தேவன் அவரை ஊழியத்திற்கு அழைத்த விதத்தை காண்போம்.


1930 - ஆம் அண்டு இவர் இரட்சிக்கப்பட்டடார். இரட்சிக்கப்பட்ட புதிதில் கனடா நாட்டில் வின்னிபெக் என்ற நகரிலுள்ள ஒரு ஆராதனையில் கலந்து கொண்டு வெளியேறிய சமயத்தில், முன்பின் தெரியாத ஒருவர் அவசரமாக ஓடி வந்து, அவருடைய கரத்தை கெட்டியாக பிடித்து கொண்டார். 'சகோதரனே, நீர் ஏன் இந்தியாவிற்கு திரும்பி சென்று அங்கே சுவிசேஷத்தை பிரசங்கிக்க கூடாது?' என்று கேட்டார். அதற்கு பக்தசிங், 'நான் ஒரு பொறியாளர், பொறியியலை கற்பதற்காக பல ஆண்டுகள் பயின்றிருக்கிறேன், மேலும் எனக்கு கொன்னலும் திக்கு வாயும் உண்டு. ஒரு சிறிய கூட்டத்திற்கு முன்பாக கூட நின்று பேசுவதற்கு என்னால் முடியாது. மேடை பயமும், சபை கூச்சமும் நிறைந்தவன், என்னை போல ஒரு தொடை நடுங்கியும், திக்குவாயும் உடையவன் எபப்டி பிரசங்கியாக முடியும்?' என்று கூறினார். அதற்கு அவர் எந்த பதிலும் பேசவில்லை. ஆனால் இரண்டு ஆண்டுகள் இதே வார்த்தைகள் அவர் இருதய செவியில் தொனித்து கொண்டேயிருந்தது.


இப்படி கர்த்தருக்கும் பக்தசிங் அவர்களுக்கும் இரண்டு ஆண்டுகள் தர்க்கமும், வாக்குவாதமும் நடந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு சாக்கு போக்கை சொல்லுவார். 'ஆண்டவரே என்னுடைய பணத்தை எல்லாம் உமக்கு அர்ப்பணிக்கிறேன், என் சம்பாத்தியத்தின் மூலமாக நான் இன்னும் அநேக ஊழியர்களை ஆதரிக்கிறேன், ஆனால் தயவு செய்து என்னை மாத்திரம் பிரசங்கியாக அழைக்க வேண்டாம்' என்று ஜெபத்தில் மன்றாடினார். ஆனால் தேவன் கூறிய பதில் என்ன தெரியுமா? 'உன் பணம் எனக்கு ஒன்றும் வேண்டாம், நீ தான் எனக்கு வேண்டும்' என்றார். பின் ஒரு வழியாக தன்னை தேவப்பணிக்கு அர்ப்பணித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, 'நம்முடைய தேவன் நம்மை ஏன் தெரிந்து கொள்கிறார் என்பது விளங்காத ஒரு புதிராகவே உள்ளது. அவருக்கு நம்மீது உரிமையிருப்பதால் அப்படி செய்கிறார். நாம் நம்மை முழுவதுமாக அவருக்கு ஒப்பு கொடுத்து, அவருக்கு கீழ்ப்படிந்து அவரை பின்பற்றும்போது அவர் நம்மிலும், நம் மூலமாகவும் கிரியை செய்கிற அவருடைய வல்லமையையும், மகிமையையும் அதிகமான அளவில் அறிந்து கொள்வோம்' என்றார்.


பிரியமானவர்களே, நாம் வேலை செய்யும் இடத்தில் நமக்கு ஒரு பொறுப்பு கொடுத்தார்களானால், அதை பெருமிதத்தோடு செய்து முடிக்கிறோம். நீங்கள் தான் ஆலயத்தின் செயலாளராக இருக்க வேண்டுமென்று விசுவாசிகள் ஏகமனதாய் கூறினார்களேயானால் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் ஆண்டவர் உங்களை பார்த்து நீ என் வேலையை செய் என்று அழைப்பாரானால், கடுகளவும் மனமின்றி தப்பிக்க முயற்சிக்கிறோம் அல்லவா? இதில் நியாயமுண்டா?


ஓரு பக்தசிங் அநேக இலட்சக்கணக்கான மக்களுக்கு ஆசீர்வாதமாக, கர்த்தருக்குள் வழிநடத்தின பரிசுத்தவானாக இருந்தது போல கர்த்தர் யாரை தெரிந்து கொள்கிறாரோ அவர்களை அவர் வல்லமையால் நிரப்பி, அவர்கள் மூலம் பெரிய காரியங்களை நிச்சயமாய் செய்கிறார். தேவன் உங்களை திட்டமும் தெளிவுமாய் அழைத்திருந்தால் சாக்கு போக்கு சொல்லாதபடி மனவிருப்பத்துடன் முன்வாருங்கள். கர்த்தர் உங்களை கொண்டு பெரிய காரியங்களை செய்வார். ஆமென் அல்லேலூயா!


சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு

என்னை அங்கு சொல்ல இங்கு ஆட்கள் உண்டு

அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்

இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர்


மந்தையில் சேரா ஆடுகளே

எங்கிலும் கோடி கோடி உண்டே

சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே

தேடுவோம் வாரீர் திருச்சபையே - மந்தையில்


அழைக்கிறார் இயேசு

அவரிடம் பேசு நடத்திடுவார்  


ஜெபம்


எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, சகோ. பக்தசிங் போன்ற அருமையான  தேவ ஊழியர்களுக்காக, பரிசுத்தவான்களுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். அவர்கள் எங்களை விட்டு பிரிந்தாலும், அவர்களை கொண்டு தொடங்கப்பட்ட ஊழியங்கள் இன்றும் கனிகளை கொடுப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். அவர்களை போன்று நீர் அழைக்கிற ஒவ்வொருவரும் உண்மையாய் தங்களை உமக்கு அர்ப்பணித்து ஊழியம் செய்ய கிருபை செய்யும்எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord