தேவனுடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக.
இன்றைய தியானம்:
சோதனை வேளையில்
கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால்.... எபிரெயர் 4:2
இன்றைய வேதவசனம்:
யாத்திராகமம்: 16:1-10 , எபிரெயர்: 4:1-16.
எல்லாப் பாடங்களையும் படித்து முடிக்கும் வரை சாப்பாடு தரமாட்டேன் என்று தாய் கண்டிப்பாகச் சொல்லி விட்டாள். வேறு வழியின்றி பையன் பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தான். இன்னும் பாதிப் பாடம் படிக்க வேண்டியிருந்த நேரத்தில் சில பிஸ்கட்டுகளையும், கொஞ்சம் பாலையும் பையனுக்கு தாய் கொடுத்தாள். சாப்பாடு தரமாட்டேன் என்று சொல்லி விட்டு எதற்காக பிஸ்கட்டும், பாலும் தருகின்றீர்கள் என்று பையன் கேட்டான். பாடங்களை படித்து முடித்தால் சாப்பாடு. ஆனாலும் அதுவரை பசியின் வேகத்தைக் கொஞ்சம் குறைக்கத்தான் பிஸ்கட்டும், பாலும் என்றாள்.
நாம் சில தேவ நன்மைகளுக்குத் தகுதியாகிட தேவன் சில சோதனைகளை அனுமதிக்கின்றார். சில சோதனைகளைக் கடந்து ஜெயம் பெற்றவர்களாக மாறும் போது, நமக்காக பெரிய நன்மைகளும் , ஆசீர்வாதங்களும் காத்திருக்கும். ஆயினும் சோதனைகளின் பாதைகளில் நமக்கு இளைப்பாறுதல் அவசியம். சோதனைகளில் தோற்றுப் போகாமல் தொடருவதற்கும் நமக்கு கொஞ்சம் பலம் தேவை. எனவே தேவன் ஏதாவது ஒரு வழியில் நம்மை தேற்றவும் திடப்படுத்தவும் செய்கின்றார்.
யோசேப்பின் எதிர்காலம் பிரமாதமாக அமையப்போகிறது. ஆயினும் அது எளிதாக வந்துவிடாது. அதற்காக சில வருத்தமான பாதைகளைக் கடந்து போயாக வேண்டும். அந்த வருத்தத்திற்குரிய பாதைகளில் தேவன் அவனுக்கு சில ஆதரவுகளை ஏற்படுத்திக் கொடுத்தார். தேவன் குறித்த காலம் வரும் வரை அந்த ஆதரவுகள் ஆறுதலையும் உற்சாகத்தையும் கொடுத்து தொடர்ந்து முன்னோக்கிப் போகச் செய்யும். தேவன் யாரையும் சோதனையின் பாதையில் அவரவர் தங்களின் பலத்தின்படி அதில் நடக்கட்டும் என்று விட்டு விடுவதில்லை. சில நல்ல நோக்கங்களுக்காக வருத்தங்களையும் பாரஙகளையும் காணச் செய்தாலும் சோர்ந்து போகாதிருக்கும் படியான கிருபைகளைத் தந்து கொண்டேதானிருப்பார்.
கானகத்தில் பிரயாணம் செய்த இஸ்ரவேல் ஜனங்களுக்கான ஆசீர்வாத உணவு அல்ல மன்னா. தேனும் பாலும் ஓடுவது போன்ற வளமையான தேசத்திற்கு வந்து சேரும்வரை அவர்களின் பிரயாணத்தில் அவர்களை ஊக்குவிக்கத் தேவன் செய்த தற்காலிக ஏற்பாடே அது. ஆனால் அவர்களோ அதனை அறியவில்லை. அவர்கள் தங்களுக்கு கிடைத்த சாதாரணமான உணவை எண்ணி முறுமுறுக்க ஆரம்பித்தார்கள். ஏனென்றால், தேவனுடைய மனதை அவர்கள அறியவில்லை. தேவன் அவர்களுக்காக ஆயத்தமாக்கி வைத்திருந்த கானானின் ஆசீர்வாதங்களை அவர்கள் விசுவாசக் கண்களால் பார்க்கவில்லை. எனவே அவர்கள் சோர்வினாலும், சலிப்பினாலும் தங்களுடைய பயணத்தின் காலத்தை மிக மிக அதிகமாக்கிக் கொண்டார்கள்.
இன்றைய சிந்தனைக்கு:
நீ தேவனோடிருந்தால் பாடுகள் உன்னை பாழாக்க அல்ல உன்னைப் பலப்படுத்தவே வருகிறது.
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை நம் அனைவரோடும் கூட இருப்பதாக. ஆமென். ஆமென்.
No comments:
Post a Comment