Friday 9 October 2015

உங்கள் சிந்தனைக்கு...

உங்கள் சிந்தனைக்கு....

நீதிமொழிகள் 29:1  அடிக்கடி கடிந்து கொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.
ஆமை ஒன்று ஆற்றைக் கடப்பதற்காக ஆற்றில் இறங்கியது. அப்போது ஒரு தேள் ஓடிவந்து, " ஆமை அண்ணா, ஆமை அண்ணா! நான் அவசரமா அக்கரைக்குப் போக வேண்டி இருக்குது. உன் முதுகில் ஒரு ஓரமா இடம் கொடுத்தீன்னா நான் பாட்டுக்கு அமைதியா அக்கரை போய் சேர்ந்துடுவேன் " என்றது. ஆமைக்குப் பாவமாக இருந்தது. இருந்தாலும் ஒரு எச்சரிக்கைக்காக , " ஒன்னப் பாத்தா எனக்கும் பாவமாதான் இருக்குது. முதுகுல ஏத்திக்கிட்டுப் போறேன் . ஆனா வழியில எதாச்சும் சேட்டை கீட்டை பண்ணினேன்னு வச்சுக்கோ , உரிச்சுப் புடுவேன் . ஆமா" முதுகில் ஏற்றிக்கொண்டது. தேளும் சந்தோஷமாய் ஏறிக்கொண்டது. சிறிது தூரம் போனதும் தேளுக்கு ஒரு சந்தேகம் ,"பாறை மாதிரி இருக்குதே இந்த ஓடு! இதுல நம்மால கொட்ட முடியுமா? சரி. லேசா கொட்டித்தான் பாப்போமே" மெல்ல ஒரு கொட்டு கொட்டியது. ஆமை கேட்டது " ஏய் என்ன பண்ற ? " இல்லண்ணே. தெரியாம கொடுக்கு பட்டுடிச்சு. மன்னிச்சுடுங்க" இது தேள். ஆமை அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கரையை அடைய இன்னும் பாதி தூரம் இருந்தது. தேளுக்கு மீண்டும் ஒரு எண்ணம், " லேசாகக் கொட்டியதால்தான் ஓடு கொஞ்சம் கூட அசையவில்லையோ! கொஞ்சம் அழுத்தமாகக் கொட்டினால்? சற்று அழுத்தமாகவே கொட்டியது. ஆனாலும் ஓடு கொஞ்சம் கூட அசையவில்லை. " என்னடா தம்பி, புத்தியக்காட்டுறியா? " என்றது ஆமை . " அட இல்லண்ணே. கொஞ்சம் வழுக்குற மாதிரி இருந்தது. கொஞ்சம் கொடுக்கால அழுத்திப் பிடிச்சிக்கிட்டேன். அதுக்குப் போயி பெருசா பேசுறியே! " என்றது தேள். ஆமை தலையை அசைத்துக் கொண்டே ஏதோ முணுமுணுத்துக் கொண்டே நீந்தியது. கொஞ்சம் நேரம் சென்றது. இப்போது கரைக்கு இன்னும் சில அடி தூரம்தான். இப்போது தேளுக்கு தைரியத்துடன் கொஞ்சம் அகங்காரமும் வந்துவிட்டது. "நான் கொட்டுனா எவ்வளவு பெரிய யானையெல்லாம் அலறி ஓடும்! சின்ன மிருகமா இருந்தா வாயில் நுரை தள்ளி செத்தே போகும். இந்த தம்மாத்தூண்டு ஆமைப்பயல் அசையக்கூட மாட்டுறானே. இதோ கரையும் நெருங்கிடுச்சு. கடைசியாக ஒரு தடவை கொட்டிப் பாக்கலாம் " பலத்தையெல்லாம் திரட்டி அழுத்தமாக ஒரு போடு போட்டது. ஆமைக்கு இப்போது கோபம் வந்தது. "நீ சரியா வரமாட்டே போலிருக்கே" என்றது. தேளுக்கு கரையை நெருங்கிவிட்ட தைரியம். " பிறந்த நாள் முதலாவே கொட்டிக் கொட்டிப் பழகிட்டேன். இந்தப் பத்து நிமிஷம் பயணத்துக்காகல்லாம் பழக்கத்தை மாத்திக்க முடியாது. இது பழக்கதோஷம். நீதாம்ப்பா கொஞ்சம் அனுசரிச்சிப் போகணும்" என்றது. ஆமை சிரித்தபடியே சொன்னது , " உனக்கு இருக்கும் பழக்கதோஷம் மாதிரியே எனக்கும் ஒன்னு உண்டு. அது இதுதான் " என்றபடியே நீருக்குள் மூழ்கி எழுந்தது. எழுந்து பார்த்தால் தேள் ஆமையின் முதுகில் இல்லை. அது ஆமை நீருக்குள் முழுகும்போதே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு செத்துப் போய்விட்டது. செல்லமே! இப்படித்தான் பலர் தேவனுடைய பிள்ளைகளிடம் இந்தத் தேளைப் போலக் கொட்டி விளையாடிப் பார்ப்பதுண்டு. ஆனால் பாவம் அவர்கள் ஒரு முறை ஆவியில் மூழ்கி ஜெபித்து எழுந்தாலே போதும். கொட்டிய தேளெல்லாம் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும் என்பது பல விசுவாசிகளின் அனுபவம்.

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord