Sunday 27 September 2015

நீதிமானாகிய யோபு

††† நீதிமானாகிய யோபு †††

 அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன். – (யோபு 13:15).

நம் வாழ்வில் துன்பங்கள், வியாதிகள் வரும்போதும், துக்கத்தால் நம் தலையணை நனைந்து கண்ணீர் விட்டு கதறும்போதும், எந்த வழியும் தெரியாமல் தத்தளிக்கும்போதும் நமக்காக ஜெபிக்க வருகிறவர்கள் யோபை எடுத்துக்காட்டாக காட்டி ஜெபித்திருப்பதை நாம் சொல்ல முடியும். நமது உறவினர்களோ,நண்பர்களோ, இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இருக்கும் மற்றவர்களுக்காக நாம் ஜெபிக்கும்போது, யோபை நாமும் எடுத்துக்காட்டி ஆறுதல் கூறியிருக்கிறோம்.

யோபுவின் பொறுமையையும், தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளும், சத்துருவின் போராட்டத்தைக் குறித்தும் நாம் யோபுவின் புத்தகத்தில் வாசிக்கும் போது நமக்கு அது அநேக உண்மைகளை எடுத்துக் காட்டுகிறது. 

அவை நம் வாழ்விற்கும்  பிரயோஜனமாயிருக்கும்.

யோபு புத்தகம் வேதாகமத்தின் மையப்பகுதியில் இருந்தாலும், வேதாகம நூல்களிலேயே மிகவும் பழைமையான புத்தகமாகும். 
யோபு ஆண்டவரை தொழுது கொள்ளும் விதம் ஆபிரகாம்காலத்தை சேர்ந்தாக உள்ளது. 

ஆகவே இவர் ஆபிரகாமிற்கும், மோசேயின் காலத்திற்கும் இடையில் வாழ்ந்திருக்கலாம் என வேத வல்லுநர்கள் கருதுகின்றனர்.
மிகவும் நீதிமானாகிய ஒருமனிதன் அனுபவிக்கும் மிகக்கடினமான வேதனைகள்தான் இந்த நூலின் மையக்கருத்தாகும். 

தேவன் நமக்கு உபத்திரவத்தை அனுப்புவதன் நோக்கம், நம்மை நொறுக்குவதற்கல்ல,நம்மை ஊன்றக்கட்டவும், நம்மை கீழே தள்ளுவதற்கல்ல, நம்மை உயர்த்துவதற்குமே என்ற உண்மையை கூறுவதாக யோபு புத்தகம் காணப்படகிறது. நமது வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கும், ஒவ்வொரு கஷ்டத்திற்கும் ஏன் என்று தேவனிடம் கேட்பது முறையல்ல என்பதையும். தேவன் சகலத்தையும் செய்ய வல்லவர், அதிகாரம் உடையவர், அவர் செய்ய நினைத்ததை யாராலும் தடை செய்ய முடியாது என்பதும் இந்த புத்தகத்தின் மூலம்நாம் அறிந்து கொள்ளும் சத்தியமாகும்.

யோபுவின் வாழ்விலிருந்து நாம் முதலாவதாக கற்றுக்கொள்ள வேண்டிய காரியம் என்னவென்றால், யோபுவுக்கு வந்த உபத்திரவங்கள், துன்பங்களுக்கு காரணம் யோபுவுக்கு தெரியாது. 
ஆனால் ஆவியானவர் தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையில் நடந்த உரையாடலை நமக்கு எழுதி வைத்துள்ளார். 

யோபுவோ அதை அறியவில்லை. தேவன் கடைசிவரை அதை அவருக்கு தெரிவிக்கவுமில்லை.
ஆனால், நமது ஒவ்வொரு துன்பங்களுக்கும் காரணத்தை எல்லா நேரங்களிலும் தேவன் நமக்கு தெரிவிப்பதில்லை.

அதை அறிந்து கொள்ள வேண்டிய அவசியமும் நமக்கு இல்லை. தான் நீதிமானாயிருந்தும், தனக்கு வந்த துன்பங்களுக்கு காணம் என்ன என்று தெரியாதிருந்தும் தன் நாவினால் பதறி எந்த வார்த்தையையுயும் பேசி தேவனை தூஷியாமல் தன்னை காத்துக் கொண்டார் யோபு. 
இவரைப்போல நம் பாடுகளில்பொறுமையாய் இருக்க கற்றுக் கொள்வோம்.இரண்டாவதாக, யோபுவின் நண்பர்கள் அவரை உண்மையாயநேசித்தவர்கள்தான். அவர்களுக்கிருந்த ஒரு குறை, தேவனைப் பற்றியும்,அவரது வழிகளைப் பற்றியும் அவர்களுக்கிருந்த அறிவு குறைவே ஆகும். அக்குறைவின் நிமித்தமாக,யோபுவின் பாடுகளின் காரணம் அறியாதவர்களாய் யோபுவின் மேலேயே எல்லாக்குற்றத்தையும் சுமத்தி, அவரைக் காயப்படுத்தினார்கள்.

 இதில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம், நம்மோடு இருக்கும் நண்பர்கள், விசுவாசிகள், உறவினர்கள் யாருக்காவது வியாதிகள்.
 போராட்டங்கள்வரும்போது, இவர்; என்ன பாவம் செய்தாரோ, அதனால்தான் இதை அனுபவிக்கிறார் என்று நினைக்கவோ குற்றப்படுத்தவோ கூடாது.
ஒருமுறை நான் வியாதியாய் இருந்தபோது, என்னைப் பார்க்கவந்த நண்பர் ஒருவர், இவர் என்ன பாவம் செய்திருந்தாலும் சரி, அதை உணர்ந்து மனம் திரும்ப கிருபை செய்யும்என்று ஜெபித்தார். 
அதை கேட்டபோது நான் உள்ளம் உடைந்துப் போனேன். 

ஏற்கனவே வியாதியின் பிடியில் தவித்த எனக்கு அவருடைய ஜெபம் இன்னும் சோகத்தையும், தவிப்பையும் கொடுத்தது. 
அதே சமயம் இன்னொரு நண்பர் வந்து ஜெபித்தபோது, கர்த்தாவே நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், ஆனால்கர்த்தர் அவைகள் எல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பீர் என்றுவசனம் சொல்கிறதே, இவருக்கு விடுதலையை தாரும், சுகத்தை தாரும், திரும்ப உமக்காக எழும்பிநிற்க கிருபை தாரும் என்று ஜெபித்தார். 

அந்த நேரத்தில் அந்த ஜெபம் எனக்கு மிகுந்த ஆறுதலைக்கொடுத்தது.
நான் நீதிமான் என்று சொல்ல வரவில்லை, ஆனால் துன்பத்திலும் பாடுகளின் மத்தியிலும் இருக்கிற ஒருவருக்கு அவருக்கு ஆறுதலை கொடுக்கும் வார்த்தைகளை பேசி, ஜெபிக்க வேண்டுமே தவிர யோபின் நண்பர்களைப்போல அவர்கள் மேல் குற்றத்தை சுமத்தி, புண்படுத்தக்கூடாது.

அந்த வியாதியோ, பாடுகளோ எதனால் வந்தது என்று தேவன் மாத்திரமே அறிவார். ஆகவே நாம் நம் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். ஒருவேளை அவர்களுடைய பாவத்தினிமித்தம் துன்பம் வந்திருந்தாலும் அவர்கள் தேவனோடு ஒப்புரவாகிக் கொள்ளட்டும். 
நாம் அவர்களை குற்றப்படுத்த வேதம் நம்மை அனுமதிக்கிறதில்லை.பிரியமானவர்களே, சில நேரங்களில் நமது வாழ்வில் வரும் பாடுகளின் காரணத்தை நம்மால் புரிந்துக் கொள்ள முடிவதில்லை. 
ஆனால் உலகத்திலே உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன் என்று சொன்ன இயேசுகிறிஸ்து நம்மோடு இருக்கும்போது எந்த உபத்திரவத்தையும் நாம் துணிவோடு எதிர்க்கொள்ள முடியும். 

உலகத்தை ஜெயித்த நம் இயேசு நமக்கு விடுதலையை தருவார். பாடுகள் பிரயாசங்கள் எதினிமித்தம் தேவன் நமக்கு அனுமதித்திருந்தாலும், நாம் அவருக்கு உண்மையாக இருக்கும்போது, அவற்றினின்று நம்மை விடுவித்து காத்துக் கொள்ள அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். 

ஆமென் அல்லேலூயா!
By methew

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord