Wednesday 9 September 2015

தினம் ஒரு தியானம் - 10/09/15 == மெஹ்தி திபாஜ் ==

தினம் ஒரு தியானம் - 10/09/15
== மெஹ்தி திபாஜ் ==

நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள். நீதி 28:1

இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட பாஸ்டர். மெஹ்தி திபாஜ் அவர்கள் கிறிஸ்தவ நூல்கள் மற்றும் வானொலி நிகழ்ச்சிகளை பார்சி மொழியில் மொழிபெயர்த்தார். இஸ்லாமிய நம்பிக்கைகளை மறுதலித்தார் எனும் குற்றத்தின் அடிப்படையில் 1983 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். ஈரானில் அரசியல் மற்றும் மத தலைவர்களின் நிர்பந்தத்தினால் கிறிஸ்தவர்கள் கொலை தண்டனைக்கு ஆளாக்கப்படுவது சகஜம். அவர் சிறையில் இருக்கும் போது அன்னாரது மனைவி அசீஸ் வேறொரு இஸ்லாமியரை மறுமணம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார். இரண்டு ஆண்டு காலம் கைகால்களை அசைக்க முடியாத துவாரத்திற்குள் அடைத்து வைக்கப்படிருந்த பாஸ்டர். மெஹ்தி திபாஜ்-க்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது. 

மெஹ்தி திபாஜ் சிறையில் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டபொழுது, நீதிமன்றத்தில் அவர் அளித்த வாக்குமூலம் தான் இது. “தான் பின்பற்றும் மதத்தை மனிதனே தெரிந்து கொள்கிறான்; ஆனால் தன்னை பின்பற்றும் கிறிஸ்தவனை கிறிஸ்துவே தெரிந்து கொள்கிறார். கிறிஸ்தவன் என்றால் கிறிஸ்துவினுடையவன் என்று பொருள். கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தை விடுவதைக் காட்டிலும் சுவாசத்தை விடுவது அதிசிறந்தது. ஏனென்றால் கிறிஸ்துவை தொடர்பவனுக்கு சாவும் ஆதாயமே. கிறிஸ்துவும் தமது மரணத்தினால் அநேக மக்களை ஆதாயப்படுத்துனார். மரணத்திலும் குருவை தொடர்பவனே சிறந்த சீடன். இவ்வுலகின் கோடி ஜனம் கொடும் வெறியோடு என்னை எதிர்த்தாலும், நானே வெற்றியாளன்! ஏனென்றால் மரணத்தையே வென்றவர் எனது பட்சமாய் இருக்கிறார். நான் கர்த்தருடைய கரத்தில் இருக்கிறேன். அற்புதமான கிரியைகளை என் வாழ்வில் நடத்தி தமது நேச நிழலில் என்னை பாதுகாத்த கிறிஸ்துவோடு கடந்த 45 வருடங்களாக பயணித்து வருகிறேன். ‘தானியேலையும் அவனது தோழர்களையும் பாதுகாத்த அதே கர்த்தர் இந்த 9 ஆண்டுகால சிதைக்கும் சிறையில் என்னை காத்தார். ‘ஒரு கன்னத்தில் அடிப்பவனுக்கு மறு கன்னத்தை காட்டு’ எனும் உன்னத சித்தாந்தத்தை சித்திரவதை நடுவில் கற்றுத் தந்தார். “எல்லா தீர்க்கர்களிலும் இயேசு ஒருவரே உயிரோடு எழுந்தார். இன்றும் நம்முடைய பாவங்களை மன்னிக்கும் இரட்சகராக ஜீவிக்கிறார். எனது வாழ்வை அவர் கரத்தில் தந்துவிட்டேன். அவரிடம் சரணடைந்து விட்ட எனக்கு, வாழ்வு என்பது இயேசுவுக்காக வாழும் வாய்ப்பு, சாவு என்பது இயேசுவுடன் வாழும் வாய்ப்பு”.

இந்த மரண வாக்குமூலத்தை உலகறிந்ததும், உலக நாடுகளின் அழுத்தம் ஈரானில் மேல் விழுந்தது. வேறுவழியின்றி ஈரான் அரசாங்கம் அவரை விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட அவர் சிலநாட்களிலேயே பூங்கா ஒன்றில் இறந்து கிடந்தார். மதத் தலைவர்கள் சிலர் அவரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. தந்தையை இழந்து தவிக்கும் பாஸ்டர் மெஹ்தி அவர்களின் நான்கு பிள்ளைகளும் கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தை இழக்காமல் நெருக்கத்திலும் சிங்கத்தைப்போலே தைரியமாகவும் சாட்சியாகவும் வாழ்ந்து வருகிறார்கள். 

சிரியா, ஈரான், ஈராக் தேசங்களில் கிறிஸ்துவ விசுவாசிகள் ஒவ்வொரு நாளும் சொல்லொன்னா வேதனையை அனுபவித்து வருகின்றனர். அகதிகளாக கடலில் சென்று சிறு குழந்தைகள் கூட மரித்து போவதை நாம் பார்க்கின்றோமே.. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்களுக்காக கண்ணீரோடு ஜெபிக்க வேண்டியது நமது கடமையல்லவா. தேசத்தின் பாவத்தினிமித்தம் அதின் (பாவ) அதிகாரிகள் அநேகராயிருக்கிறார்கள்; (ஜெபிக்கின்ற) புத்தியும் அறிவுமுள்ள மனுஷனாலோ அதின் (தேசத்தின்) நற்சீர் நீடித்திருக்கும் - நீதி 28:2. பிரியமானவர்களே! நாம் ஜெபிக்கும் பொழுது அந்த தேசங்களில் செயல்படுகின்ற துன்மார்க்க கிரியைகள் அழிக்கப்பட்டு, நல்ல செயல்கள் நீடித்திருக்கும். ஒடுக்கப்படுகின்ற மக்களுக்காக அனுதினமும் ஜெபிக்க அர்ப்பணியுங்கள். கர்த்தர் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமேன். அல்லேலுயா.

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord