பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள். (I யோ 3.1)
______________________________________
நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள் என யோவான் கூறுகிறார். நம் தேவனுடைய அன்பு அலாதியானது. விஷேசித்தது. அநாதி தேவன் நம்மை பிள்ளைகளாக ஏற்றுக் கொள்ளுகிறார். அவர் நம்மைப் பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ளும்போது, அவருடைய ஆவியினாலே நடத்தப்படுகிறோம். பயமுள்ள அடிமைப்போல அல்ல. அப்பா பிதாவே என புத்திரனைப்போல அவரைக் கூப்பிடும் சிலாக்கியத்தைப் பெற்றுக் கொள்ளுகிறோம். நாம் பிள்ளைகளானால் தேவனுடைய சுதந்தரரும் கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாம். கிறிஸ்துவுடனே நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனே கூடப் பாடுபட்டால் அப்படியாகும். இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம். இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை. ஆகிலும் அவர் வெளிப்படும் போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினாலே. அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.
அவர் மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும் அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறது போல, தன்னையும் சுத்திகரித்துக் கொள்ளுகிறான். இயேசுவின் நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொள்ளும்போது அவருடைய பிள்ளைகளாகிறோம். அவருக்கென்று பிரித்தெடுக்கப்பட்டவர்களாய் பரிசுத்தமாய் வாழும்போது அவருடைய குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கிறோம். அவருடைய ஆவியினாலே நடத்தப்படும்போது அவருடைய புத்திரராய் வாழ்கிறோம்.
இளைய குமாரனைப் போல் தூரமாய்ச் சென்று பன்றிகளுடன் வாழ்கிறோமோ? வேண்டாம் எழுந்து தகப்பனிடத்துக்கு வாருங்கள். மூத்தகுமாரனைப் போல தகப்பனோடு வழக்காடிக் கொண்டு நீர் எனக்கு ஒன்றும் செய்யவில்லை. எனக்கு ஒன்றும் தரவில்லை என்று வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருக்கிறோமோ? தேவ அன்பு உங்களை இன்று தகப்பனோடு இசைந்து வாழ அழைக்கிறது. உனக்கு மனமகிழ்ச்சி உண்டாகும். இன்றே தேவ அன்புக்குள் வா.
ஜெபம்
அப்பா உமது அன்பின் அகலமும் நீளமும் ஆழமும் உயரமும் புத்திக்கெட்டாதது. என்னை உமது அன்பினால் மூடிக் கொள்ளும் ஆமென்.
Rev JB
No comments:
Post a Comment