செப்டம்பர் மாத வாக்குத்தத்தம்
‘உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக’ (ரூத் 2:12)
இந்த மாத வாக்குத்தத்தம் ‘கர்த்தராலே, உங்களுக்கு நிறைவான பலன் கிடைக்கும்’
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களுக்கு நிறைவான பலனைக் கொடுக்கப்போகிறார். அமுக்கி குலுங்கி சரிந்து விழும்படியான ஆசீர்வாதப் பலனை நீங்கள் பெறப்போகிறீர்கள். எனவே, கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.
படிக்கும் பிள்ளைகளுக்கு ஆண்டவர் விசேஷித்த ஞானத்தின் ஆசீர்வாதப் பலனைத் தரப்போகிறார். அநேக ஆண்டுகளாய் நல்லதொரு வேலையில்லையே என்று அங்கலாய்த்துப் போயிருக்கும் தம் மக்களுக்கு கர்த்தர் சிறப்பானதொரு வேலை வாய்ப்பினை வழங்கப் போகிறார்.
‘நெடுங்காலமாய் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும், விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்’ என்ற வேத வசனம் உங்களில் நிறைவேறப் போகிறது.
தங்கள் சரீர பெலவீனத்தைக் குறித்த கவலை அநேகருக்கு உண்டு.‘பயப்படாதே, நான் உனக்கு கேடகமும், உனக்கு மகா பெரிய பெலனுமாயிருக்கிறேன்’ என்று வாக்கருளின தேவன், உங்களுக்கு நிறைவான பெலனைத் தரப்போகிறார்.
காண்டா மிருகத்துக்கொத்த பெலனை கர்த்தரால் நீங்கள் பெற்றுக்கொள்ளப் போகிறீர்கள்.
குடும்பத்தில் இரட்சிக்கப்படாதவர்கள் இயேசுவின் கிருபையால், இரட்சிப்பின் நிறைவான பலனைப் பெற போகிறார்கள்.
புதிய தொழிலை தொடங்க வேண்டும் என்ற வாஞ்சையில் உள்ளவர்களுக்கு கர்த்தர் புதிய வழி வாசல்களை திறக்கப்போகிறார்.
கடன்பாரம் மற்றும் வேண்டாத பிரச்சனைகள், துன்பம், துயரம் அனைத்தும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டாகும் நிறைவான பலனால், சூரியனைக் கண்ட பனிபோல் மறைந்தே போகும்.
கர்த்தர் தம் மக்களுக்கு வாக்கருளின நிறைவான பலனைப் பெற்றுக்கொள்ள நீங்கள் செய்ய வேண்டிய சுலபமான ஒரு காரியம்,‘இயேசுவே நீர் எனக்கு போதும்’ என்று அவர் பாதத்தில் அடைக்கலமாகி விடுவதுதான்.
நம்முடைய பிரயாசம் நமக்கு எந்தவிதத்திலும் பலன் தராது. ஆனால் இயேசுவால் எல்லாம் கூடும். அவரின் செட்டைகளின் கீழ் நாம் அடைக்கலம் புகும்போது, சகலவித ஆசீர்வாதங்களினாலும் நம்மை நிரப்பி, நிறைவான பலனைப் பெற்றுக்கொள்ள கிருபை செய்வார். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக! ஆமென்!
ஜெபம் : அன்பின் இயேசுவே, உமது கிருபையால் நிறைவான ஆசீர்வாத பலனைப் பெற்றுக்கொள்ள உம்முடைய சமூகத்தில் என்னை தாழ்த்துகிறேன். நேற்றும் இன்றும் என்றும் மாறாத உம்முடைய திவ்விய அன்பினால் என்னையும் குடும்பத்தாரையும் ஆற்றித் தேற்றி வழி நடத்தி, இம்மாத ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ள தயை செய்வீராக. நீர் அப்படியே செய்யப்போகிறதற்காக உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்!
No comments:
Post a Comment