இன்றைய தியானம்
நீ அக்கினியில் நடக்கும் போது வேகாதிருப்பாய். - ஏசாயா 43:2
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே,
இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
கர்த்தராகிய தேவன் அவருடைய பிள்ளைகளாய் வாழ்கிற யாவரையும் இஸ்ரவேலராக மாற்றி, அவர்களை முழு அன்புடன் நேசிக்கிறார். அவர்களை ஒரு நிமிடமும் தனியே விடுவதில்லை. அவர்கள் படுகிற ஒவ்வொரு உபத்திரவத்திலும், கஷ்டங்களிலும் அவர் அவர்களோடு கூடவே இருக்கிறார். அவரை நம்பி, அவரை ஆராதித்து, அவர் கற்பனைகளுக்கு கீழ்படிந்து, அவைகளைக் கைகொண்டு நடக்கும் அவருடைய பிள்ளைகள் வாழ்வில் தண்ணீர், அக்கினி போன்ற பாதைகளை கடந்துச் செல்லும் சூழ்நிலைகள் வரும். உங்களுக்கு பிரச்சனையே வராது என்று கர்த்தர் சொல்லவில்லை. போராட்டம் வரும். அக்கினி சோதனைக்குள் கடந்து செல்லும் அனுபவம் வரும். ஆனாலும் சங்கீதக்காரன் சொன்ன சங்.66:12ன் அனுபவம் உன் வாழ்க்கையின் அனுபவமாக மாற நான் உன்னோடு .இருப்பேன், நீ பயப்படாதே என்று உங்களை தைரியப்படுத்துவார். தீயையும், தண்ணீரையும் கடந்து வந்த கர்த்தருடைய பிள்ளைகள் எங்களை செழிப்பான இடத்திற்கு கொண்டுவந்து விட்டார் என்று கூறுகிறார்கள்.
இதை வாசிக்கும் சகோதரனே, சகோதரியே, ஓயாத கடன் பிரச்சனையால், வியாதியால், வேலையில்லாத குழப்பத்தால், வேறு எந்த குடும்ப பிரச்சனையால் மிகவும் சோர்ந்து போயிருக்கிறீர்கள். எனக்கன்பானவர்களே, செழிப்பான இடத்தில் பழைய ஏற்பாட்டு ஜனங்களை கொண்டு வந்து விட்டவர் எல்லாவித ஆசீர்வாதங்களையும் உங்களுக்கு தந்து ஆசீர்வதிப்பார். அதற்கிடையில் 1பேது.1:7ன்படி உங்கள் விசுவாசம் சோதிக்கப்படும் சூழ்நிலைகளை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சந்திக்க நேரிடும். தானி.3:25-27ல் சாத்ராக், மேஷாக், ஆபேத்நெகோ மூன்று பேர்களுடைய வாழ்க்கையில் அக்கினியை கடக்கும் சூழ்நிலைகளைச் சந்தித்தார்கள். ஏசா.43:2ன்படி அக்கினில் நடக்கும் போது வேகாதிருப்பாய் என்ற வாக்குத்தத்தம் அவர்கள் வாழ்க்கையில் நிறைவேறியது. அக்கினியின் நடுவிலே நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருந்தது என்று வாசிக்கிறோம். அவர்கள் சரீரங்கள் மேல் அக்கினி பெலன் செய்யாமலும், அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், அக்கினியின் மணம் அவர்களிடத்தில் வீசாமல் இருந்ததை, அதிகாரிகள் யாவரும் கண்டார்கள் என்று வசனம் சொல்லுகிறது. அந்த அற்புதம் இந்நாட்களில் உங்கள் வாழ்வில் நிறைவெற வேண்டுமானால் அவர்களோடிருந்தவர் உங்களோடிருக்க வேண்டும். கர்த்தருடைய ஆவி உங்களுக்கும் இருக்க வேண்டும். அவர்களுக்குள் இருந்த வைராக்கியம் இக்கடைசி காலத்தில் உங்களுக்குள்ளும் இருக்க வேண்டும். அதற்காக உங்களை அர்ப்பணித்து இன்று ஜெபிப்பீர்களா?
கர்த்தர் தாமே உங்களோடிருப்பாராக, உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களை நடத்துவாராக.
No comments:
Post a Comment