கர்த்தரில் நிலைத்திருத்தல்!
Abide in Christ
யோவான் 15:4-5 சொல்கிறது, ‘என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன். கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்க மாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்க மாட்டீர்கள். நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான். என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.’
இயேசுவையல்லாமல் நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது. சர்வ லோகத்தையும் சிருஷ்டித்த தேவகுமாரனாக அவர் இருக்கிறார். இயேசு அன்பின் சொரூபமாக இவ்வுலகம் வந்தார். நாம் அவரில் நிலைத்திருக்கும்போது, அவரின் அன்பின் சுபாவம் நம்மையும் ஆட்கொள்ளுகிறது. தேவனோடு நெருங்கிய உறவு வைத்திருப்போமானால், உலகில் நமக்கு நெருக்கம் என்பதே இல்லை!
நாம் எதில் நிலைத்திருக்க வேண்டும்?
1. இயேசுவில் நிலைத்திருத்தல் : இயேசு என்ற நாமம் உன்னதமானது. இயேசுவின் குணாதிசயங்கள் அருமையானது.
யோவான் 14:14 ‘என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்’
இயேசு என்ற நாமத்தை சொல்லி ஜெபிக்கும்போது, ஜெயம் உண்டாகிறது.
2. இயேசுவின் வார்த்தையில் நிலைத்திருத்தல் :
யோவான் 15:7 ‘நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.’
நாம் யாரைப் பின்பற்ற விரும்புகிறோமோ, அவரைப்போலவே மாறும் இயல்பு நமக்குள் வருவது இயற்கையே. அந்தப்படி ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைகளில் நாம் நிலைத்திருக்கும்போது, அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள் வாசம் செய்து, இயேசுவைப்போல் நன்மை செய்பவராய் நம்மை மாற்றிவிடும்.
யோவான் 4:46-53ல் ஒரு சம்பவத்தைப் பார்க்கிறோம். கப்பர்நகூம் என்னும் ஊரில், ஒருவனின் மகன் வியாதிபடுகிறான். அவன் இயேசுவிடம் வந்து, தன் மகனை குணமாக்கும்படி வேண்டுகிறான். இயேசு, ‘நீ போகலாம் உன் குமாரன் பிழைத்திருக்கிறான்’ என்கிறார். அவன் இயேசு சொன்ன வார்த்தையை நம்பி போகிறான். இயேசுவின் வார்த்தையில் 42 குணாதிசயங்கள் உண்டு. அதில் ஒன்று நம்பிக்கை.
இயேசுவின் வார்த்தையில் நம்பிக்கை வைப்போமானால், வாழ்க்கையில் வசந்தம் தென்றலாய் வீசும்.
3. இயேசுவின் அன்பில் நிலைத்திருத்தல் :
யோவான் 15:9 ‘பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன், என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்’
இயேசுவின் அன்பு அது மாறாத அன்பு.
யோவான் 3:16ல் இறைவனின் உன்னத அன்பை நாம் காணலாம். ‘தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்’
1கொரிந்தியர் 13ம் அதிகாரத்தில் அன்பின் மகத்துவத்தை பவுலடிகளார் விளக்குகிறார்.
1கொரி.13:13 ‘விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது, இவைகளில் அன்பே பெரியது’
உலகம் முழுவதுக்கும் பொதுவான ஒரு சொல், தேவன் அன்பாகவே இருக்கிறார்.
இயேசுவின் அன்பு நிபந்தனையில்லா அன்பு.
ஜார்ஜ் முல்லர் என்ற தேவ மனிதர், சிறு பிள்ளைகளுக்காகவே ஒரு ஆதரவற்ற இல்லம் நடத்தி வந்தார். ஒவ்வொருநாளும் அவர் இல்லத் தேவைகளுக்காக அன்பான இயேசுவையே நோக்கிப் பார்ப்பாராம். அன்பின் தேவன் குறைவுகளை நிறைவாக்கி ஆசீர்வதித்த சம்பவங்கள் ஏராளம் என்று அவர் சாட்சி பகருகின்றார்.
ஒரு தேவ ஊழியர், ஒரு சமயம் மிகுந்த மனவேதனையில் இருந்தார். ஊழியத்தின் தேவைகள் சந்திக்கப்படவில்லையே என்ற ஆதங்கம் அவருக்கு. ஒவ்வொருநாளும் எண்ணற்ற தபால்கள் ஜெப விண்ணப்பங்களாய் அவருக்கு வந்து குவியும். பிறருக்காக ஜெபிக்கும் தமக்கு, இன்னும் ஒரு விடிவுகாலம் வரவில்லையே என்ற கவலையோடு அன்றும் அமர்ந்திருந்தார்.
அவரின் உதவியாளர் வழக்கம்போல் தபால் கட்டுகளை சுமந்துவந்து அவர் முன் வைத்தார். ஊழியர் வேண்டாவெறுப்பாக ஒவ்வொரு கவராக எடுத்து பிரித்து படித்து ஜெபித்து உதவியாளரிடம் கொடுத்து, இன்றைக்கும் ஒன்றுமில்லை என்பதுபோல் உதட்டைப் பிதுக்கினார். உதவியாளர், இன்னும் ஒரு கவர் உண்டு பிரியுங்கள் என்றார். நம்பிக்கை இல்லாதவராய் அதனையும் எடுத்து பிரித்தார், அவரின் கண்களில் ஆயிரம் வால்ட் பல்ப் மின்னியது. என்ன அதிசயம், அந்த கவரில் ரூபாய் ஒரு லட்சத்துக்கான காசோலை இருந்தது.
பல நேரங்களில், நமது பிரச்சனைகள் பெரிய பந்துபோல் வீங்கி பயமுறுத்தும்.ஆனால் இயேசு தமக்கே உரிய நேரத்தில், அன்பு என்னும் ஊசி கொண்டு, பிரச்சனை என்னும் பந்தை உடைத்துப்போட்டு அற்புதத்தைச் செய்துவிட்டு போய்விடுவார்.
அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார். அவரின் அன்பில் நாம் நிலைத்திருப்போமானால் கனிதரும் வாழ்வாய் நாம் செழித்திருப்போம் என்பது நிச்சயம். ஆமென்!
No comments:
Post a Comment