Thursday 16 July 2015

Jesus must increase in our life

அழகான பெரிய  சேவல் ஒன்று இருந்தது.  அதன் நடையும், அழகான பலவர்ண சிறகுகளும் , சிவப்பான கொண்டையும் கண் கொள்ளாக் காட்சி. 

தினமும் பொழுது விடியும் போது தலையை உயர்த்தியபடி சத்தமாய்க் கூவும். அந்த சத்தத்திலேயே
அந்தப் பகுதியில் உள்ள அனைவரும் எழுந்து வேலைகளைத் துவக்குவார்கள். இதில் சேவலுக்கும் கொஞ்சம் பெருமைதான்.
             
     சேவலின் அழகையும், கம்பீரத்தையும் கண்டு அக்கம் பக்கத்தில் உள்ள பல சேவல்களுக்கு அதைக் கண்டாலே  பொறாமை . சில சேவல்கள் அதனுடன்  நேரடியாகவும் மோதிப் பார்த்தன. ஆனால் அதன் வலிமைக்கு ஈடு கொடுக்க முடியாமல்  தோற்றுப் போயின.  ஆகவே நம்முடைய சேவல் முடிசூடா மன்னனாக  வலம் வந்தது.  

         தோற்றுப் போன சேவல்களில் ஒரு சேவல் கொஞ்சம் தந்திரம் மிக்கது.  நமது சேவலை ஒழித்துக் கட்ட ஒரு திட்டம் தீட்டியது.  

           தனக்கு நெருக்கமான ஒரு கோழியிடம் சில காரியங்களை ரகசியமாகச் சொல்லி அனுப்பியது. 

        அந்தக்  கோழி நேராகப்  பெரிய சேவலிடம் போய் சொன்னது, 
" சேவலே ! உன்னை மாதிரி அழகும்,  வலிமையும் உள்ளவங்க  இந்த வட்டாரத்திலயே கிடையாது. இந்த ஊரையே நீதான் கூவி எழுப்பி விடுறே.  எனக்கு  ஒரே ஒரு  ஆசை.  நீ காலை மட்டும் கூவாம , இருட்டு வந்தவுடனேயே  கூவிட்டா பொழுதும் விடிஞ்சிடும். நாமும் பயமில்லாம வெளிச்சத்திலேயே தூங்கலாம்.  உன்னோட பெருமையும் நாலு பேருக்குத்  தெரியவரும்" என்றது. 

    " இதைக் கேட்ட சேவலுக்குத் தலைகால் புரியவில்லை.  
" அப்படின்னா நான் கூவித்தான் பொழுது விடியுதா ? சூரியனைக்  கட்டுப்படுத்தும்  அதிகாரம் எங்கிட்ட தான் இருக்கா?  சே! இவ்வளவு நாள் தெரியாம போச்சே!  சரி போகட்டும்.  இன்னையிலேர்ந்து நம்ம  அதிகாரத்தை ஆரம்பிப்போம் .  இருட்டட்டும் " என்று இருள் கவியக் காத்திருந்தது. 
         மாலை வந்தது.  மெல் மெல்ல  இருளின் ஆதிக்கம் தொடங்கியது.  
" இந்த ஊரே இப்ப சக்தியைப்  பாக்கப் போகுது பார். இனி நான் தான் ராஜா ". 

            இருள்  முற்றி கும்மிருட்டானது சேவல் காலையில் செய்வதுபோல்
கூரை மேல் ஏறி நின்று கூவத்தொடங்கியது. ஆனால் சூரியன் வரவில்லை.  பொழுது விடியவும் இல்லை.  

    கூவியது. கூவியது.  மீண்டும் மீண்டும் கூவியது.  தொண்டை வலியெடுத்துக் குரல் கம்பிப் போனது.  கடுமையான தொண்டை வலியிலும் , தோல்வி தந்த மன உளைச்சலிலும் தூங்கிப் போனது.  
         சேவலின் இந்த மாற்றம்  அதை வளர்த்தவனுக்கும் , அக்கம் பக்கத்தினருக்கும் பெரிய தலைவலியானது. சிலர்  அந்த நேரத்திலேயே  , தங்கள்  தூக்கம்  கெட்டுப் போனதற்காக அவனிடம் சண்டைக்கு வந்து விட்டார்கள். 

             பொழுது விடிந்தது. கத்திக் கத்திக் களைத்துப் போயிருந்த  சேவல் விடிந்தது கூடத் தெரியாமல் தூங்கிவிட்டது. வழக்கமாக சேவல் குரல் கேட்டு விழித்தவர்ளெல்லாம் ,  அதன் குரலைக் கேட்காமல்  ஆச்சரியப்பட்டனர்.  அதன்  உரிமையாளனிடம் விசாரித்தனர். 

         சேவலை வளர்ந்தவன்  ஒரு முடிவுக்கு வந்தான்.  நேற்றிரவு சேவல் கொடுத்த குழப்பத்துடன் அது இன்று காலை கூவாததையும் எண்ணிப் பார்த்தான்.  

           பொழுது விடிந்து  வெளிச்சம்  சுள்ளென்று  அடித்தபோதுதான் சேவல் விழித்துப் பார்த்தது. அவசரம் அவசரமாகக் கூவத்தொடங்கியது.
          வளர்த்தவன் தன் மனைவியிடம்  
சொன்னான் , 
" நான் சொன்னது சரியாப் போச்சு பாத்தியாடி ?  இதுக்கு எதோ பிசாசு  பிடிச்சிடுச்சு. அதனால தான்  கூவ வேண்டிய நேரத்தை விட்டுட்டு, சம்மந்தமில்லாத  நேரத்தில எல்லாம்  கத்திக்கிட்டு கிடக்குது  .  கத்தியையும், சட்டியையும் கொண்டு வா.  இனிமே இதை விட்டு வைக்கிறது நல்லதில்லை " என்றான் .

    கொஞ்ச நேரத்திலேயே கொண்டைச் சேவல் குழம்பில்  கொதித்தது.

செல்லமே!  நமது எந்த சாதனையுமே  நம்முடயது அல்ல.  பெருமைக்கு உரியவர்  கர்த்தர்  மட்டுமே.  நம்மால்தான் காரியங்கள்  நடக்கிறது என்று எண்ணி விட்டால்  நமக்காகப் பிசாசு  இஞ்சி, பூண்டு  அரைக்க  ஆரம்பித்து விட்டான்  என்று அர்த்தம்.  ஒவ்வொரு வெற்றியிலும்  கர்த்தரின் நாமத்தையே மகிமைப் படுத்துவாயா ?
செல்லமாய் 
John Saravanan 


    
 

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord