Monday 29 June 2015

Devotional story in Tamil

ஒரு கிராமவாசி இருந்தான்.  அவனுக்கு  ஒரு அழகான சிறிய கூரை வீடு இருந்தது.  அதில் தன் தாய், தந்தையுடனும் இரண்டு குழந்தைகளுடனும் வசித்து வந்தான்.  போதுமான விவசாய  வருமானம்,  சொந்த வீடு,  நல்ல குடும்பம் இவையெல்லாம்  இருந்தும்  அவன் மனதில் ஒரு குறை ஏற்பட்டது.  அது நாளாக நாளாகப் பெரிய சுமையாக மாறி மனதை அழுத்தத் தொடங்கியது. அவனுடைய தந்தை ஒரு நோயாளி.  சதா  இருமிக் கொண்டே இருப்பார்.  அவன் மனைவிக்கும்,  அவனது தாயாருக்கும் அடிக்கடி சண்டை வரும்.  இருவரும் தொண்டை கிழியக் கத்துவார்கள். பிள்ளைகளோ
 எப்போதும்  வீட்டுக்குள்ளயே சத்தமிட்டபடி ஓடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். அவனுக்கு அந்த  ஓயாத சத்தமும், இரைச்சலும் பிடிக்கவேயில்லை. எங்காவது ஓடிப்போய் விடலாமா என்று கூடத் திட்டமிட்டான். இரவெல்லாம் இருமல் சத்தம். பகல் முழுவதும் சண்டையும், கூச்சலும் .  பைத்தியமே பிடித்துவிடும்  போலிருந்தது.  அப்போது  அந்த ஊருக்கு ஒரு அறிஞர் வந்தார்.  அவரிடம் போய்த் தனது நிலையைச்  சொல்லி  அழுதான்.  அவர்  அவனிடம் ஒரு பூனையைக்  கொடுத்து ,  "இதை வீட்டுக்குள்ளேயே வைத்துக் கொள்" என்றார்.  அவனும் பிரச்சினை  இன்றோடு முடிந்தது  என்று மகிழ்ச்சியோடு வாங்கிச் சென்றான்.  பூனை வீட்டுக்குள்  வந்த  உடனே வேலையைக் காட்ட 
 ஆரம்பித்து விட்டது.  எலியைத்துரத்தும் சாக்கில் பானையத் தள்ளி உடைத்து ,  பாலையெல்லாம் தரையில் சிதறடித்து, இதைப் பார்த்து  அவன் மனைவி இன்னும்  அதிகமாகக் கத்தி,  இருந்த நிம்மதியும்  பறிபோய் விட்டது. மீண்டும் ஞானியிடம் ஓடினான்,
 " ஐயா! நீங்க  கொடுத்த பூனையால வீட்டுல பிரச்சனை  அதிகமாயிடிச்சி ஐயோ  " என்றான்.  அவர்  ஒன்றும் சொல்லாமல் ஒரு நாயைக் கொண்டு வந்து  "இதை வீட்டுக்குள்ளேயே வைத்துக் கொள் " என்றார்.  அவனும்  "இனியாவது  பிரச்சினை தீரட்டும்" என்று எண்ணி நாயை இழுத்துச் சென்றான்.  நாய் வீட்டுக்குள்  நுழைந்த  உடனேயே  பூனையைப் பார்த்து விட்டது.  உடனே துரத்த  ஆரம்பித்தது.  பாத்திர பண்டங்கள் தரையில் உருண்டன.  மனைவி கத்த ஆரம்பித்தாள்.  " இந்தத்  தொல்லைங்கள முதல்ல வெளியே தள்ளி கதவ சாத்துங்க " என்றாள்.  அவன் ஒன்றுமே  சொல்லாமல் பெரியவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நின்றான்.  மறுநாள் விடியற்காலையிலேயே அவரைத் தேடி  ஓடினான்.  
அவன் வந்து,  வாயைத் திறந்து பேசும் முன்பே ஞானி ஒரு மாட்டை இழுத்து வந்தார்.  " இதுவும் வீட்டுக்குள்ளயே  இருக்கட்டும் " என்று சொல்லி விட்டு அவனது பதிலை எதிர்பாராமல்  உள்ளே சென்றுவிட்டார்.  அவனுக்கோ என்ன சொல்வதென்றே புரியவில்லை.  " சரி.  இந்த தடவையாவது நல்லது நடக்கட்டும் " என்று முணகிக் கொண்டே மாட்டையும் வீட்டுக்குள் விட்டான்.  அவ்வளவுதான்.  வீடே போர்க்களமானது .  நாய் குரைத்துக் கொண்டே  மாட்டை நெருங்கியது.  மாடு சீறிப் பாய்ந்து நாயை முட்டத் துரத்தியது.  ஒரு நொடிகூட வீட்டுக்குள்  இருக்க முடியவில்லை.  அடுப்பு கீழே விழுந்து உடைந்து  , உலையில் இருந்த சாதம் தரையில் சிதறியது.  இம்முறை  அப்பா,  அம்மா, மனைவி, பிள்ளைகள்  எல்லோருமே கத்த  ஆரம்பித்து விட்டனர். ஐயோ! நரகம் நரகம்.  இதற்கு மேல்  அவனால் பொறுக்க முடியவில்லை.  உடனே  ஞானியின் இடத்திற்கு வேகமாக  ஓடினான். அவனை எதிர்பார்த்திருந்தது போல  அவரும்  வெளியிலேயே நின்று கொண்டிருந்தார்.  அவரைப் பார்த்த உடனே மனதில் இருப்பதையெல்லாம்  கொட்ட  ஆரம்பித்தான்.
 " என்ன ஐயா,  நிம்மதியைத் தேடி உங்ககிட்ட வந்தா,  இப்ப  இருந்த நிம்மதியும் போச்சே ! இருக்குறதா சாகறதான்னு தெரியலையே! " என்று புலம்பினான்.  பெரியவர் சொன்னார், " நீ  உடனே போய் நான் கொடுத்த அனைத்தையும் திரும்பக் கொண்டு வா " என்றார்.  அவனும் சந்தோஷமாய் ஓடிப்போய் பூனை, நாய் , மாடு எல்லாவற்றையும் கொண்டு வந்து அவரிடம் ஒப்படைத்தான். இப்போது அவரும்  அவனுடன் வந்தார்.   வீட்டிற்குள் நுழைந்தனர். அடடா!  அவன்  எதிர்பார்த்து ஏங்கிய  அதே அமைதி.  " ஐயா! இந்த அமைதியைத்தான் ஐயா தேடி அலைஞ்சேன் " . அவரைக் கையெடுத்து வணங்கினான்.  பெரியவர் சொன்னார், " மகனே! இந்த  அமைதி ஒன்றும் வெளியே இருந்து வந்துவிடவில்லை.  உன் வீட்டிலேயேதான் இருந்தது.  நீதான் அதைப் புரிந்து கொள்ளவில்லை. பெரிய பிரச்சினைகள் உன்னைத் தொடும்போதுதான் நீ எவ்வளவு நல்ல வாழ்க்கை வாழ்ந்திருக்கிறாய் என்பது புரியும்.  இனி தேவையில்லாமல் குழம்பாதே " என்றார்.  செல்லமே!  நம்முடைய நிம்மதியும்,  சமாதானமும்  நாம் விசுவாசிக்கும் தேவனிடம் அல்லவா இருக்கிறது?  மற்றவன்  அதற்கு  உடந்தையாக முடியுமா?

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord