இன்றைய தியானம்.
இனி யாக்கோபு வெட்கப்படுவதில்லை, இனி அவன் முகம் செத்துப்போவதுமில்லை. - ஏசாயா 29:22
கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே,
இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
பிரியமானவர்களே, ஆபிரகாமை மீட்டுக்கொண்ட கர்த்தர் யாக்கோபின் வம்சத்தைக்குறித்து இனி யாக்கோபு வெட்கப்படுவதில்லை; இனி அவன் முகம் செத்துப்போவதுமில்லை என்று ஏசயா தீர்க்கதரிசி முலம் கர்த்தர் வாக்குரைத்தார். அந்நிய தேவர்களை சேவித்துவந்த நாகோரின் குடும்பத்திலிருந்து, ஆபிரகாமை அழைத்து வந்து அவனை கானான் தேசமெங்கும் சஞ்சரிக்கச்செய்து, அவன் சந்ததியை திரட்சியாக்கி, அவனுக்கு ஈசாக்கைக் கொடுத்தேன் என்று யோசுவா 24:3ல் வாசிக்கிறோம்.
பிரியமானவர்களே, ஈசாக்கின் குமாரனாகிய யாக்கோபை கர்த்தர் இஸ்ரவேலாய் மாற்றினார். ஏசா.45:17ல் இஸ்ரவேலோ, கர்த்தராலே நித்திய இரட்சிப்பினால் இரட்சிக்கப்படுவான்; நீங்கள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும், கலங்காமலும் இருப்பீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இதை வாசிக்கும் பிரியமானவர்களே, ஏசா.44:21-26 வரை உள்ள வசனத்தை வாசித்து பார்ப்பீர்கள் என்று சொன்னால் உங்களால் விளங்கிக்கொள்ளமுடியும். யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, என் என்னால் மறக்கப்படுவதில்லை என்று கர்த்தர் நம் ஒவ்வொருவரையும் பார்த்து இன்று கூறுகிறார்.
ஆம் எனக்கன்பானவர்களே, நான் வெட்கப்பட்டு, என் முகம் எல்லா இடங்களிலும், குடும்பத்திலும், வேலை ஸ்தலத்திலும், ஊழியத்திலும் செத்துப்போயிற்று, என் வாழ்க்கையில் எனக்கு ஒரு நம்பிக்கையே இல்லை என்று மனம் உடைந்து போயிருக்கிறீர்களோ? உங்களைத் தான் என் திரித்துவ தேவன் உற்சாகப்படுத்த எழுதிவைத்திருக்கிறார்.
உன் மீறுதல்கள், பாவங்கள் எல்லாவற்றையும் நான் அகற்றிவிட்டேன், நீ என்னிடத்தில் திரும்பு, நான் உன்னை மீட்டுக்கொண்டேன் என்று கூறுகிறார். ஆகவே மகிழ்ந்து, கர்த்தரை துதித்து பாடுவீர்களா? நன்றி சொல்வீர்களா? உன்னை மீட்டவர் உன்னை உருவாக்கினவர் சொல்லுகிறார், என் மகனே, என் மகளே, யோவேல் 2:27ன்படி இனி நீ வெட்கப்படுவதில்லை, உன் முகம் செத்துப்போவதுமில்லை.
எனக்கன்பானவர்களே, ஏசா.61:7ன்படி, உங்கள் வெட்கத்திற்கு பதிலாக இரண்டத்தனையாய் பலன் வரும் என்ற வாக்குத்தத்தத்தின்படி உங்களை ஆசீர்வதிப்பார். ஏசா.29:22ஐ உரிமை பாராட்டி ஜெபியுங்கள்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களோடிருப்பாராக, உங்களை நடத்துவாராக.
No comments:
Post a Comment