இன்றைய தியானம்
தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் திடங்கொண்டு, அதற்கேற்றபடி செய்வார்கள். தானி.11:32
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே,
இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
பிரியமானவர்களே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடங்கொள்ளுங்கள, நான் உலகத்தை ஜெயித்தேன் என்று கூறினார். நம்முடைய தேவன் யார் என்று அறியும் அறிவை கர்த்தருடைய பிள்ளைகள் பெற்றிருத்தல் அவசியம். வேதத்திலே அநேக கர்த்தருடைய தாசர்கள் தங்கள் தேவனை எப்படியாக அறிந்திருந்தார்கள் என்று வாசித்து அறிந்துக்கொண்டால், நாமும் அவ்வாறே நம்முடைய தேவனை அறிந்துக்கொள்வோம். திடங்கொள்வோம்.
யோபு 19:25ல் என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன் என்று யோபு தன்னுடைய உயிருள்ள விசுவாசத்தை திடங்கொண்டு அறிக்கையிடுகிறார். எந்த சூழ்நிலையில் யோபு இந்த வார்த்தையை அறிக்கை செய்கிறார் தெரியுமா பிரியமானவர்களே?
யோபு 19:20, 19ல் வாசித்துப்பார்த்தால், அவனுடைய எலும்புகள் தோலோடும், அவனுடைய மாமிசத்தோடும் ஒட்டிக்கொண்டிருக்கும்போது, அவன் பற்களை மூட கொஞ்சம் தோல் மாத்திரம் தப்பினது என்று கூறுகிறான். அவன் பிராண சிநேகிதர் எல்லாரும் வெறுத்த வேளையில், அவன் சிநேகித்தவர்கள் விரோதிகளானார்கள் என்றும் கூறுகிறான். அப்படிப்பட்ட நேரத்தில் தான் யோபு திடங்கொண்டு, தன்னுடைய தேவனைப்பற்றி அறிந்திருக்கிறதை யோபு 19:25ல் அறிக்கையிடுகிறான்.
எனக்கன்பானவர்களே, 2 இராஜா.5:15ல் நாகமான் என்ற சீரிய இராஜாவின் படைத்தலைவன் குஷ்டரோகியாய் இருந்தான். அவன் வியாதியாய் இருந்து, பூரண சுகமானபடியால் அவன் அறிக்கை செய்யும் போது இஸ்ரவேலில் இருக்கிற தேவனைத் தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்தேன் என்று கர்த்தரை குணமாக்கிகிறவர் என்று அறிக்கையிடுகிறான்.
பிரியமானவர்களே, நீங்கள் உங்கள் தேவனை எப்படி அறிந்திருக்கிறீர்கள்? யோபுவைப்போல, நாகமானைப் போல அறிந்திருப்பீர்கள் என்று சொன்னால் திடங்கொண்டு வாழ கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களோடிருப்பாராக. உங்களை நடத்துவாராக.
No comments:
Post a Comment